அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நம் அனைவருக்கும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக
நாம் வாழும் இவ்வுலகில் போட்டி, பொறாமை, நல்லென்னம் இல்லாமை போன்ற காரணங்களால் மனிதன் பல வழிகளில் சபிப்பிற்கு உள்ளாகி வாழ்க்கையை துறந்து விடுகிறான். பிறகு அவனால் எந்த ஒரு செயலையும் சி
றப்பாக செய்யமுடியவில்லை.
வாழ்க்கை என்னவோ இருண்டு விட்டதாக என்னி முடங்கி விடுகிறான். ஆனால் இதிலிருந்து மீள வழித் தெரியாமல் இருக்கிறான். பிரார்த்தனை (துஆ) செய்தால் நம் வாழ்க்கையை திரும்ப பெற்றுவிடலாம் எனப்தை இக்கட்டுரையின் மூலம் தெரிந்து
க்கொள்ளலாம்.
எல்லாம் வல்ல இறைவன் யாருடைய பி
ரார்த்தனையையும் நிராகரிப்பது இல்லை. யார் இறைவனிடத்தில் இரு கைகளையும் ஏந்தி பிரார்த்தனை செய்கிறார்களோ! அவர்களை வெரும் கைகளாக திருப்பி அனுப்ப இறைவன் வெட்கப்படுகிறான் என் அருள்மறையில் கூறுகிறான். இறைவன் படைத்த எந்த ஒரு ஆன்மாவும் இறைவனிடத்தில் வேண்டினால் அதன் வேண்டுதலுக்கு ஏற்றார்ப்போல் நற்கூலியை தருவதாக இறைவன் கூறுகிறான். மேலும் எந்த ஒரு வேண்டுதலும் முழு ஈடுபாட்டுடன் இருக்கவேண்டும். இறைவனிடத்தில் எந்த முறையில் வேண்டுதல் வேண்டும் என்ற சில வரைமுறைகள் இருக்கின்றன, அதன் அடிப்படையில் வேண்டினால் அவர்களுடைய துஆவை இறைவன் ஒரு போதும் மறுப்பதில்லை. மேலும் அடியார் அழைக்கும் அழைப்புக்கு வெகு விரைவில் பதில் தர ஏதுவாக நம் பிடரி நரம்பைவிட மிக அருகாமையில் இருப்பதாகக் கூறுகிறான். அல்குர்ஆனில் இறைவன் பிரார்த்தனையைப்பற்றி 44 அத்தியாயத்தில் 49 தடவை விளக்கியுள்ளான்.
மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (50:16)
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;, என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக. (2:186)
நாம் கேட்கும் பிரார்த்தனை இறைவனிடத்தில் கண்டிப்பாக ஏற்கப்படும். நாம் ஒன்றுக்காக பிரார்த்தனை செய்துக்கொண்டு இருப்போம் ஆனால் அது நம்க்கு நிறைவேறி இருக்காது நாம் நம்முடைய துஆவை இறைவன் ஏற்றுக்கொள்வதில்லை என்று தவறுதலாக புரிந்துக் கொண்டிருப்போம் ஆனால் இறைவனோ! நம்முடைய பிராத்தனைக்கு பகரமாக, நம்க்கு வரக்கூடிய துன்பதிலிருந்து நம்மை காப்பாற்றிருப்பான். ஆக மொத்தத்தில் நம்முடையப் பிரார்த்தனை ஏதோ ஒரு வகையில் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது என்பது காலத்தால் அறிந்த உண்மை.
மேலும் வல்ல ரஹ்மான் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அது தாங்கக்கூடிய அளவுக்குதான் கஷ்டங்களைக்கொடுகிறான், மனிதன் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இறைவனை துதிக்கவேண்டும், இறைவனிடத்தில் மன்றாடி துஆ செய்யவேண்டும் என்பதற்காகவே படைத்த இறைவனே, எவ்வாறு ஒவ்வொரு மனிதனும் பிரார்த்தனை (துஆ) செய்யவேண்டும் என்று அருள்மறையாம் குர்ஆனிலேயே அழகாக சொல்லித் தருகிறான்.
அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்;) "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (2:286). மேலும்,
"எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!" (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.) (3:8)
இதன் மூலம் இறைவன் எந்த ஒரு ஆத்மாவுக்கும் அதிகப்படியான துன்பங்களையோ, கஷ்டங்களையோ கொடுப்பது இல்லை என்பது நன்றாக விளங்குகிறது.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (அவர்களைப் பின்பற்றித்) தொழும்போது 'அஸ்ஸலாமு அலல்லாஹி கப்ல இபாதிஹி, அஸ்ஸலாமு அலா ஜிப்ரீல, அஸ்ஸலாமு அலா மீகாயீல, அஸ்ஸலாமு அலா ஃபுலானின் வ ஃபுலானின்' (அடியார்களுக்கு முன் அல்லாஹ்வுக்கு முகமன் உண்டாகட்டும். (வானவர்) ஜிப்ரீல் மீது சாந்தி உண்டாகட்டும். இன்னார் இன்னார் மீது சாந்தி உண்டாகட்டும்) என்ற கூறிவந்தோம். நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கித் திரும்பி, 'நிச்சயமாக அல்லாஹ்வே 'ஸலாம்' (சாந்தியளிப்பவன்) ஆக இருக்கிறான். எனவே, உங்களில் ஒருவர் தொழுகையின் இருப்பில் இருக்கும்போது 'அத்தஹிய்யாத்து லில்லாஹி, வஸ்ஸலவாத்து, வத்தய்யிபாத்து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன' (சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்களின் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டும்) என்று கூறட்டும். இதை நீங்கள் கூறினாலே வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் சலாம் கூறினார்கள் என அமையும். 'அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதி கூறுகிறேன்) என்றும் கூறட்டும். பிறகு, தாம் நாடிய பிரார்த்தனையை ஓதிக்கொள்ளலாம்' என்றார்கள். (புகாரி: 79:6230) இதன் மூலம் யார்வேண்டுமானாலும் யாருக்காகவும் பிரார்த்தனை (துஆ) செய்யலாம்.
பிரார்ததனை இறைவனிடத்தில்:
எந்த ஒரு ஆத்மாவும் இறைவனிடத்தில் மட்டும் தான் தன்னுடைய பிரார்த்தனையை வைக்கவேண்டும், உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவியும் தேடுகிறோம் என்ற குர்ஆன் வசனத்திற்கு ஒப்ப ஒவ்வொரு ஆத்மாவும் செயல்படவேண்டும். நம்மைப்படைத்த இறைவனிடத்தில் எதற்காக வேண்டுமானலும் பிரார்த்தனை செய்யலாம். உதாரணத்திற்கு இறைவனிடத்தில் இப்லீஸ் தன்னை உலகம் அழியும் நாள் வரை விட்டு வைக்குமாறு வேண்டினான், அதைக்கூட இறைவன் மறுக்காமல் அவனுடைய வேண்டுதலை ஏற்றுக்கொண்டான். அப்படிப்பட்ட இறைவன் நம் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்ளமாட்டானா! என்ன?
மன ஓர்மையுடன் பிரார்த்தனை:
நாம் செய்யக்கூடிய பிரார்த்தனை எளிதில் இறைவனால் ஏற்றுக்கொள்ளப் பட வேண்டும் என்றால் அவனிடத்தில் மன ஓர்மையுடனும், தூய்மையுடனும், அழகியமுறையிலும் அவனிடத்தில் கேட்க வேண்டும். அப்படிக் கேட்கக் கூடிய துஆ இறைவனிடத்தில் உடனே அங்கிகரிக்கப்பட்டு எதற்காக அவன் பிரார்த்தனை செய்தானோ அது நிறைவேற்றப்படுகின்றது. மேலும் இறைவனிடத்தில் எந்த நேரத்திலும் பிரார்த்தனையை மேற்கொள்ளலாம் இதையே இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்.
உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப்போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது (இவன் அல்லாது) அது வாயை அடைந்து விடாது - இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை. (13:14)
(நபியே!) எவர் தம் இறைவனுடைய திருப்பொருத்த்தை நாடியவர்களாக காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையை மேற் கொண்டிருப்பீராக! இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர்; இன்னும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்; ஏனெனில் அவன்தன் இச்சையைப் பின் பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்பு மீறியமாகி விட்டது. (18:28)
ஆகவே இறைவனிடத்தில் நாம் எவ்வாறு பிரார்த்தனை (துஆ) செய்ய வேண்டும் என்பது இதன் மூலம் தெளிவாக புரிந்துக்கொள்ள முடியும். மேலும் யாருடைய பிரார்த்தனையும் நிராகரிக்கப்படுவதில்லை. இறுதியாக ஒரு குர்ஆன் ஆயத்தை எடுத்துக்கூறி என் சிறிய படைப்பை முடிக்கிறேன். அல்லாஹ் எல்லாருடைய பிரார்த்தனையையும் ஏற்று (கபுல்) கொள்வானாக என்று பிரார்த்தனை செய்தவனாக............!
ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும் அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், அவர்கள் "எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்" என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள். (66:8)
நன்றி உம்மத்